‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

Update: 2021-08-07 21:09 GMT
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை சாகுபடி செய்துள்ளனர். இந்த மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இது தொடர்பான செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் வெளியானது. 
இதனை தொடர்ந்து உடனடியாக தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கோவை வேளாண்மை பல்கலைக்கழக பயிர்பாதுகாப்பு மைய இயக்குனர் பிரபாகர், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் புகழேந்தி, பூச்சியியல்துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஏத்தாப்பூர் மரவள்ளிக்கிழங்கு ஆராய்ச்சி நிலைய தலைவர் வெங்கடாசலம், மற்றும் அதிகாரிகள் சத்தி அருகே உள்ள செண்பகபுதூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். 
இது குறித்து அவர்கள் விவசாயிகளிடம் கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக அகற்றி தீயிட்டு அழிக்க வேண்டும். இதன் மூலம் மற்ற பயிர்களுக்கு மாவுப்பூச்சிகளின் தாக்குதல் பரவாமல் இருக்கும். மேலும் மீன் அமினோ அமிலம், வேப்ப எண்ணெய், அசாடி ராஷன் இதில் ஏதாவது ஒன்றை 100 லிட்டர் தண்ணீரில் 50 மில்லி லிட்டர் வீதம் கலந்து 10 நாட்களுக்கு ஒரு முறை பயிரில் தெளிக்கவேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் பயிரில் மாவுப்பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்’ என்று அதிகாரிகள் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரில் மாவுப்பூச்சிகளின் தாக்குதல் குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் வந்து ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கிய அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்