அண்ணன், தம்பிக்கு கத்திக்குத்து: ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது
வாழப்பாடி அருகே அண்ணன், தம்பியை கத்தியால் குத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாழப்பாடி,
கத்திக்குத்து
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி பெருமாபாளையத்தை சேர்ந்தவர் மாயவன் (வயது 27). இவர் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த இவருடைய உறவினர்களான ராமசாமி மகன் அருண்குமார் (29), அசோக்குமார் (27) ஆகியோருக்கும் இடையே நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி இரவு மாயவன், அருண்குமார், அசோக்குமார் மற்றும் உறவினரான மணி (34) ஆகியோர் அந்த பகுதியில் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, மாயவனுக்கும், அருண்குமார், அசோக்குமாருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அப்போது மாயவன், மணியுடன் சேர்ந்து, அருண்குமார், அசோக்குமாரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
போலீஸ்காரர் கைது
இதில் அருண்குமாருக்கு கையிலும், அசோக்குமாருக்கு தலையிலும் கத்திக்குத்து விழுந்தது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுதப்படை போலீஸ்காரர் மாயவன் மற்றும் மணியை கைது செய்தனர். மேலும், மாயவன் கொடுத்த புகாரின்பேரில் அருண்குமார், அசோக்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்ட மாயவன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வாழப்பாடி போலீசார் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.