திருவாச்சி ஊராட்சியில் நிறைவடையும் தருவாயில் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி
திருவாச்சி ஊராட்சியில் நிறைவடையும் தருவாயில் கீழ்பவானி பாலம் அமைக்கும் பணி உள்ளது.;
திருவாச்சி ஊராட்சியில் நிறைவடையும் தருவாயில் கீழ்பவானி பாலம் அமைக்கும் பணி உள்ளது.
பாலம்
பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி ஊராட்சிக்குட்பட்ட பூவம்பாளையம் கிராமத்திற்கும், சூலக்காத்தான்வலசு கிராமத்திற்கும் குறுக்கே, கீழ்பவானியின் பிரதான வாய்க்கால் செல்கிறது.
இந்த 2 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கு, வாய்க்காலின் இரு புறமும் விவசாய பூமிகள் உள்ளன. வாய்க்கால் குறுக்கே செல்வதால் அவர்கள் தங்களது நிலங்களுக்கு தினந்தோறும் வாவிக்கடை வரை சென்றுவர, 5 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டி இருந்தது. கீழ்பவானி வாய்க்கால் வெட்டப்பட்ட பிறகு, பூவம்பாளையம் மற்றும் சூலக்காத்தான் வலசு கிராமங்களுக்கிடையே போக்குவரத்து என்பது அடியோடு நின்று விட்டது.
முடங்கிய பணி
60 அடி அகலமுள்ள வாய்க்கால் கரையின் இரு புறமும் நின்று கொண்டுதான், அப்பகுதி மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ள முடியும்.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த 2000-ம் ஆண்டில், பிரதம மந்திரியின் கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பூவம்பாளையம் கிராமத்திலிருந்து சூலக்காத்தான்வலசு கிராமத்திற்கு கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே மேம்பாலம் கட்டி, புதிதாக ரோடு போட அனுமதி கிடைத்தது. பிறகு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின் இந்த திட்டம் அப்படியே முடங்கிப் போனது.
அமைச்சர் பார்வையிட்டார்
கடந்த 20 ஆண்டுகளாக, இந்த திட்டத்தை நிறைவேற்றி தருமாறு, திருவாச்சி ஊராட்சி பொது மக்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டும், அது நிறைவேறவில்லை. இப்போது தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அமைச்சர் சு.முத்துசாமி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட பாலம் அமையும் இடத்தை பார்வையிட்டார். பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நிறைவடையும் தருவாயில்..
இதையடுத்து பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அது முடியும் தருவாயில் உள்ளது. ஒரே மாதத்தில், இந்த வாய்க்கால் பாலம் கட்டப்பட்டதோடு மட்டுமல்லாது, பாலத்தின் அருகே வாய்க்காலின் இரண்டு கரைகளும், கான்கிரீட் சுவர்களால் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து, திருவாச்சி ஊராட்சி மன்றத் தலைவர் சோளிபிரகாஷ் கூறுகையில், தங்களது 60 ஆண்டுகால கோரிக்கையை, அமைச்சர் சு.முத்துசாமி மூலம் நிறைவேற்றி தந்த தமிழக அரசுக்கு, திருவாச்சி ஊராட்சி பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.