இலங்கை அகதியை வெட்டிய வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது

இலங்கை அகதியை வெட்டிய வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-07 20:39 GMT
பெரம்பலூர்:

முன்விரோதம்
பெரம்பலூர்-வடக்கு மாதவி சாலை ஒடசக்குளம் தர்ஷினி நகர் யாஷினி தெருவை சேர்ந்தவர் சுதர்சன் என்ற சூனி கண்ணன் (வயது 40). இலங்கை அகதியான இவர் மீது பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பெரம்பலூர் உழவர் சந்தை அருகே சூனி கண்ணனை, அவரது நண்பரும், பிரபல ரவுடியுமான வினோத் உள்ளிட்ட கும்பல் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது.
இதில் பலத்த காயமடைந்த சூனி கண்ணன், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூனி கண்ணனும், ரவுடி வினோத் உள்ளிட்டோர் அடங்கிய கும்பலும் ஒரே கோஷ்டியை சேர்ந்தவர்கள் என்பதும், கோஷ்டிக்குள் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக சூனி கண்ணனை, வினோத் உள்ளிட்ட கும்பல் வெட்டியதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
4 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்த சார்லசின் மகன் ரவுடி வினோத் (26), ஆலம்பாடி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த முருகன் மகன் ஆட்டோ டிரைவர் நவீன் (21), குரும்பலூர் பாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த ஜேசுதாஸ் மகன் பட்டதாரி சாலமன் ஜெனட் (22), கல்பாடி வடக்கு தெருவை சேர்ந்த அண்ணாதுரை மகன் கமலஹாசன் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்