தென்காசியில் மீண்டும் செயல்பட தொடங்கிய உழவர் சந்தை

தென்காசியில் உழவர் சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியது

Update: 2021-08-07 20:29 GMT
தென்காசி:
கடந்த தி.மு.க‌. ஆட்சியில் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு உழவர் சந்தை இயங்கி வந்தது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை அங்கு கொண்டு வந்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர். அதன்பிறகு இந்த சந்தைகள் திடீரென நிறுத்தப்பட்டன. நீண்ட காலமாக அவை இயங்காமல் இருந்தன.

இந்த நிலையில் தென்காசியில் உழவர் சந்தை நேற்று புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்பட தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவின்படி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக துணை இயக்குனர் கிருஷ்ணக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர். அங்கு மொத்தம் 42 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகளும் வியாபாரிகளும் அந்த கடைகளை அமைத்து இருந்தனர்.

நேற்று பொதுமக்களுக்கு 10 சதவீத சலுகை விலையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த சலுகை விலை விற்பனை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் நடைபெறும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்