தஞ்சை மாவட்டத்தில் வழிபாட்டுக்கு தடை: கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறாது
தஞ்சை மாவட்டத்தில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறாது.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறாது.
வழிபாட்டிற்கு தடை
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது நிலவி வரும் கொரோனா நோய் தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதித்து தமிழகஅரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பலி நடைபெறாது
ஞாயிற்றுக்கிழமைதோறும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். தமிழகஅரசு தடை விதித்து இருப்பதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை சிவகங்கைபூங்கா அருகே கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெறாது. தஞ்சை மானம்புச்சாவடி சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் நேற்று நடைபெற இருந்த திருப்பலி கூட ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இன்றைக்கும் ஆராதனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.