சமையல் மாஸ்டர் உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் சமையல் மாஸ்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.;
வெள்ளியணை
சமையல் மாஸ்டர் தற்கொலை
வெள்ளியணை தெற்கு அக்கரஹாரத்தை சேர்ந்தவர் பழனிமலை (வயது 47). இவர் அங்குள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த இவர் விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பழனிமலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மற்றொரு சம்பவம்
வெள்ளியணை வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (41). திருமணமாகாத இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது அருந்த பணம் இல்லாததால் விரக்தி அடைந்த அவர், எலி மருந்தை(விஷம்) தின்று விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ரமேஷ் இறந்தார். இந்த இரு தற்கொலை சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.