16-வது நாளாக நிரம்பி வழியும் சோலையாறு அணை
வால்பாறையில் மீண்டும் கனமழை பெய்ததால் 16-வது நாளாக சேலையாறு அணை நிரம்பி உள்ளது.
வால்பாறை,
வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெய்த புயல் மற்றும் மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளுக்கும் அணைக்கட்டுகளுக்கும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனால் எப்போதும் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆகஸ்டு மாதத்தில் தான் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பும். ஆனால் இந்த ஆண்டு புயல் மழை காரணமாகவே ஜூலை 23-ந்தேதியே சோலையாறு அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தற்போது வால்பாறை பகுதியில் பெய்யத் தொடங்கி விட்டது. இதனால் வால்பாறை பகுதியில் இரவிலும் பகலிலும் விட்டு கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே புயல் மழை காரணமாக கடந்த ஜூலை மாதம் 23 தேதி நிறைந்து முழு கொள்ளளவையும் தாண்டி 164 அடியை எட்டியிருந்த சோலையாறு அணை நீர் மட்டம் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக மழை இல்லாததால் 160 அடியாக குறையத் தொடங்கியது.
இந்த நிலையில் வால்பாறை பகுதியில் நேற்றுமுன்தினம் முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் நேற்று முதல் மீண்டும் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கி விட்டது. இதனால் சோலையாறு அணை நிரம்பி நிலையில் கடல் போல் ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 35 மில்லிமீட்டர் மழையும், சோலையாறு அணையில் 30 மில்லி மீட்டர் மழையும், நீராரில் 44 மில்லி மீட்டர் மழையும், மேல்நீராரில் 77 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,604 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தற்போது 161.52 அடியாக உள்ளது.