நெல்அறுவடை எந்திரத்தை திருடியபோது பொதுமக்கள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்

நெல்அறுவடை எந்திரத்தை திருடியபோது பொதுமக்கள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் திருக்கோவிலூர் அருகே பரபரப்பு

Update: 2021-08-07 17:32 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள எஸ்.கொல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 56). இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான நெல் அறுவடை எந்திரத்தை வீ்ட்டின் முன்பு நிறுத்தி வைத்துவிட்டு தூங்க சென்றார். அப்போது நள்ளிரவில் நெல் அறுவடை எந்திரத்தை யாரோ மர்ம நபர்கள் இயக்கும் சத்தம் கேட்டு படுக்கையில் இருந்து எழுந்த நாகராஜ் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் நெல்அறுவடை எந்திரத்தை திருடிக்கொண்டு சென்றார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜ் திருடன் திருடன் என கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்தனர். இதைப்பார்த்த மர்ம நபர் நெல்அறுவடை எந்திரத்தை நடு வழியில் நிறுத்தி விட்டு இறங்கி வயல்வெளி பகுதிக்குள் புகுந்து  தப்பி ஓடினார். அப்போது எதிர்பாராவிதமாக அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்த தகவலறிந்து அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து வந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி வாலிபரை மீட்டனர். விசாரணையில் அவர்  திருக்கோவிலூரை அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் குப்புராஜ்(வயது 23) என தெரியவந்தது. 

பின்னர் அவரை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்கு பின்னர் குப்புராஜை போலீசார் கைதுசெய்தனர். நெல் அறுவடை எந்திரத்தை திருடியபோது பொதுமக்களுக்கு பயந்து தப்பி ஓடிய வாலிபர் கிணற்றில் விழுந்த சம்பவத்தால் எஸ்.கொல்லூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்