திருக்கோவிலூர் அருகே ஊராட்சி செயலாளரை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியல்
திருக்கோவிலூர் அருகே ஊராட்சி செயலாளரை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவிலூர்
சாலை மறியல்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட வி.சித்தாமூர் கிராமமக்கள் நேற்று திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அதிக நேரம் வேலை செய்ய சொல்லி குறைந்த கூலி கொடுப்பதாகவும் இதை தட்டி கேட்கும் கிராமமக்களை ஊராட்சி செயலாளர் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், ஊரில் குடிநீர்ப் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும் இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி மறியல் போரட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாம்ராஜ் ஆகியோர் விரைந்து வந்து கிராமமக்களிடம் சமரசம் பேசினர்.
பரபரப்பு
அப்போது தங்களை தரக்குறைவாகப் பேசும் ஊராட்சி செயலாளரை மாற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் வற்புறுத்தினர். கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதைத் தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் வி.சித்தாமூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.