நள்ளிரவில் இடி மின்னலுடன் பலத்த மழை

விழுப்புரம் பகுதியில் நள்ளிரவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2021-08-07 17:24 GMT
விழுப்புரம், 

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. விழுப்புரத்திலும் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் இருந்து மாலை வரை வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு 10.15 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்யத்தொடங்கியது.
அதன் பிறகு இரவு 10.30 மணியளவில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான கோலியனூர், காணை, வளவனூர், பெரும்பாக்கம், தோகைப்பாடி, கல்பட்டு, சிந்தாமணி, அய்யூர்அகரம், கப்பியாம்புலியூர், குச்சிப்பாளையம், பிடாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை இடைவிடாமல் ½ மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.

சாலையில் தண்ணீர்   பெருக்கெடுத்து ஓடியது

பின்னர் சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் நள்ளிரவு 1 மணியளவில் பெய்யத்தொடங்கிய மழை நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழையாகவும் பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானம், ரெயில்வே மைதானம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானம் மழையினால் சேறும், சகதியுமாக மாறியது. பலத்த மழையினால் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. உடனே நகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர்ந்து, நேற்றும் விழுப்புரம் பகுதியில் காலையில் இருந்து மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 4.30 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரமாக தூறிக்கொண்டே இருந்து ஓய்ந்தது. இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்