2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல்லில் நகை பறிப்பு வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு வீட்டில் கடந்த மாதம் 3 பேர் புகுந்து வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து நகைகளை பறித்துச்சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேனியை சேர்ந்த சந்தோஷ் (வயது 22), அர்ஜூன் (26), அய்யப்பன் (28) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சந்தோஷ், அர்ஜூன் ஆகியோர் மீது ஏற்கனவே நகை பறிப்பு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி கலெக்டர் விசாகனிடம் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் 2 பேரையும் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.