திருக்கோவிலூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது

திருக்கோவிலூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனைவி கொலை வழக்கு தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர். 6 பவுன் நகைக்காக கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் கொடுத்தனர்

Update: 2021-08-07 16:35 GMT
திருக்கோவிலூர்

ராணுவ வீரர் மனைவி

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வையாபுரி மனைவி பார்வதி(வயது 65). வையாபுரி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தனது இளையமகன் சங்கருடன் வசித்து வந்த பார்வதி அவரிடம் கோபித்துக்கொண்டு தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பார்வதி திருக்கோவிலூர் அருகே உள்ள கொழுந்திராம்பட்டு கிராமத்தில் உள்ள காப்பு காட்டில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். நகை, பணத்துக்காக அவரை யாரோ மர்ம நபர்கள் எரித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

தனிப்படை

இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், திருமால், அன்பழகன், உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீஸ்காரர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் பார்வதியை கொலை செய்தது தொடர்பாக நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் மகன் நவீன் என்கிற அருள் சகாயம்(19) மற்றும் சடகட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் விஜய்(19) ஆகியோரை பிடித்து மணலூர் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கொலை

விசாரணையில் விஜய், அருள்சகாயம் இருவரும் கடந்த மாதம் 13-ந் தேதி இரவு விருதுவிலங்கினன் கிராமத்தை சேர்ந்த சாமியார் ஒருவரிடம் குறி கேட்டு வரலாம் என்று கூறி பார்வதியை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் விருதுவிலங்கினன் கிராமத்துக்கு செல்லாமல் கொழுந்திராம்பட்டு கிராமத்தில் உள்ள காப்பு காட்டுக்கு பார்வதியை அழைத்து சென்றனர். 
அப்போது திடீரென இருவரும் சேர்ந்து பார்வதியின் வாயில் துணியை அமுக்கி மூச்சை திணற அடித்து கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம் என சுமார் 6 பவுன் நகைகளை பறித்தனர். பின்னர் ஆள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து பார்வதியின் உடலில் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக போலீசாருக்கு வாக்கு மூலம் கொடுத்தனர். 

கைது

இதையடுத்து விஜய், அருள் சகாயம் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 6 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். 6 பவுன் நகைக்காக ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவியை கொன்று எரித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மணலூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



மேலும் செய்திகள்