தரிசனத்துக்கு தடையால் பழனி முருகன் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம்

வழிபாட்டு தலங்களில் தரிசனத்துக்கு தடை எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.;

Update: 2021-08-07 16:07 GMT
பழனி:
வழிபாட்டு தலங்களில் தரிசனத்துக்கு தடை எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 
தரிசனத்துக்கு தடை
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, உண்டியல் காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்திவிட்டு செல்கின்றனர். இதில் வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 
இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நெரிசலான பகுதிகளில் மக்கள் கூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2-ந்தேதி ஆடி கிருத்திகை நாளன்று கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்றபடி வழிபட்டனர். 
பக்தர்கள் ஏமாற்றம்
இந்தநிலையில் ஆடி அமாவாசையையொட்டி நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக நேற்று பழனியில் முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மேலும் வெளியூரில் இருந்து அதிகாலையிலேயே பழனிக்கு வந்த பக்தர்கள் கோவில் நுழைவு பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அதேபோல் வெளியூரில் இருந்து பழனிக்கு வந்து அறை எடுத்து தங்கியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவர்கள் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

மேலும் செய்திகள்