4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூரில், 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன்பு நேற்று போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் சார்பில் 4 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் காஞ்சீபுரம் மண்டல பொருளாளர் முரசொலி சேகர் தலைமை தாங்கினார். திருவள்ளூர் பணிமனை துணை தலைவர் முரளி, சி.ஐ.டி.யூ. துணை பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மோகன்ராஜ், கவிச்சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திரளான பணிமனை தொழிலாளர்கள் கலந்து கொண்டு பொதுத்துறையை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.