கர்நாடகத்தில் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் பங்கேற்க அனுமதி; மாநில அரசு உத்தரவு

கர்நாடகத்தில் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் பங்கேற்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-06 21:44 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் பங்கேற்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகள்

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கேரளா, மராட்டிய மாநிலங்களின் எல்லையில் உள்ள 8 மாவட்டங்களில் வார இறுதி நாட்கள் ஊரடங்கு மற்றும் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு தொடர்பாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் திருமணம், குடும்ப விழாக்களில் அதிகபட்சமாக 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் செயல்பட தடை இல்லை.

மதுக்கடைகளை திறக்கலாம்

கோவில்கள், வழிபாட்டு தலங்கள் போன்றவற்றை திறக்கலாம். ஆனால் கோவில் விழாக்கள், திருவிழாக்கள் கொண்டாட அனுமதி இல்லை. இந்த உத்தரவு வருகிற 16-ந் தேதி வரை அமலில் இருக்கும். ஊரடங்கின்போது, அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி மற்றும் மருத்துவம் தொடர்பான உபகரணங்களை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள், அரசு துறை அலுவலகங்கள் செயல்படலாம்.

வார இறுதி நாட்கள் ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், இறைச்சி, மீன் கடைகள் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்கலாம். தெருவோர வியாபாரிகள் மதியம் 2 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மதுக்கடைகளும் மதியம் 2 மணி வரை திறக்கலாம். ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.

அடையாள அட்டை

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே வினியோகம் செய்ய 24 மணி நேரமும் அனுமதி அளிக்கப்படுகிறது. பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கு தடை இல்லை. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நிறுவனத்தின் அடையாள அட்டையை காட்டி பயணிக்கலாம். சரக்கு வாகனங்கள் இயங்கலாம். ஆனால்தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்