கத்திமுனையில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
திருப்பரங்குன்றம் அருகே கத்திமுனையில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே கத்திமுனையில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தர மறுப்பு
திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகர் காமராஜர் தெருவில் வசித்து வந்தவர் சண்முகவடிவு (வயது 69). இவர் நேற்று முன்தினம் இரவு கடைவீதிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம மனிதர்கள் சண்முகவடிவை மோதுவதுபோல வந்ததாக தெரிகிறது. அதனால் சண்முகவடிவு ஓரமாக ஒதுங்கினார்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சண்முகவடிவை கீழே தள்ளினர். மேலும் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்து இருந்த நகையை கழற்றுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் சண்முகவடிவு நகையை தர மறுத்துள்ளார்.
வலைவீச்சு
இதற்கிடையில் கண் இமைக்கும் நேரத்தில் 3 மர்ம மனிதர்களும் சண்முகவடிவு கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கு இருந்து தப்பி சென்று தலைமறைவாகினர்.
இதுகுறித்து சண்முகவடிவு கொடுத்தபுகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.