ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செந்துறை ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இங்கு நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் ஒரு வார்டுக்கு ஒரு வாரம் என பிரித்து வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முதல் சிவன் கோவில் தெரு(5 வார்டு) பொதுமக்கள், நூறு நாள் வேலை திட்டத்தில் புது ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஊராட்சி தலைவர், தனக்கு வேண்டப்பட்டவர்களான மற்ற வார்டுகளில் உள்ளவர்களை, 5-வது வார்டை சேர்ந்தவர்களுடன் வேலை பார்க்க அனுமதிப்பதாகவும், இதனால் தங்கள் வார்டில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் போவதாகவும், தங்களுக்கு மற்ற வார்டுகளில் வேலை வழங்காதபோது, தங்கள் வார்டில் அடுத்த வார்டை சேர்ந்த மக்களை அனுமதிப்பது எதனால் என்று கேட்டும், ஊராட்சி தலைவரை கண்டித்தும் செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.