கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை
ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை
இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல் மற்றும் ஆறு போன்ற புண்ணிய நீர்நிலைகளில் தங்களின் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அந்த வகையில் உலக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.
தடை விதிப்பு
இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் கன்னியாகுமரி கடலில் அதிக கூட்டம் கூட வாய்ப்பு உள்ளதால் பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அன்றைய தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை போன்றவை பக்தர்கள் இன்றி நடைபெறும். மேலும், நாளை இரவு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி கடற்கரைக்கு பக்தர்கள் புனித நீராட செல்லாத வகையில் அனைத்து பாதைகளிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல், குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையிலும் ஆண்டுதோறும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அங்கும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.