சங்ககிரி அருகே விற்பனை செய்ய முயன்ற 17 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் பறிமுதல் 4 பேர் கைது

சங்ககிரி அருகே விற்பனை செய்ய முயன்ற 17 ஆயிரம் லிட்டர் பயோ டீசலை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

Update: 2021-08-06 20:42 GMT
சங்ககிரி
பயோ டீசல்
சங்ககிரி அருகே நேற்று தேசிய நெடுஞ்சாலையையொட்டி லாரிகளுக்கு பயோ டீசல் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சங்ககிரி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சங்ககிரி அருகே குப்பனூர் பகுதியில் சாலையோரம் ஒரு டேங்கர் லாரி உள்பட 2 லாரிகளும், ஒரு மினி வேனும் நின்றன. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், சங்ககிரி ஆர்.எஸ்.ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது33), வேலம்மாவலசு கவுதம் (23), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த சங்கர் (38), பழனிசாமி (44) என்பதும், லாரிகளுக்கு பயோ டீசல் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.
பயோ டீசல் பறிமுதல்
மேலும் 3 வாகனங்களிலும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள 17 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 லாரிகள், மினி வேனை பறிமுதல் செய்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் நிறுத்தினர். மேலும் ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர், பழனிசாமி ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கைதான 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்