சண்டையை விலக்கிய முதியவர் படுகொலை

தோகைமலை அருகே ஏற்பட்ட நிலத்தகராறில் சண்டையை விலக்கிய முதியவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும், தந்தை-மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;

Update: 2021-08-06 19:39 GMT
கரூர்
தோகைமலை
நிலத்தகராறு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள சின்னியம்பாளையம் ஊராட்சி, ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் மாரியாயி (வயது 70). இவருக்கு சுப்பா நாயக்கர் (65), பொம்மா நாயக்கர் (60), கிருஷ்ணன் நாயக்கர் (55) ஆகிய சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலம் ஈச்சம்பட்டியில் உள்ளது.
இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. சுப்பா நாயக்கரும், கிருஷ்ணன் நாயக்கரும் அந்த நிலத்தில் அக்காவிற்கு பங்கு கேட்டனர். அதற்கு பொம்மா நாயக்கர் பங்கு கொடுக்க முடியாது என்று தகராறு செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக மாரியாயியும், கிருஷ்ணன் நாயக்கரும் குளித்தலை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
 இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாரியாயி, கிருஷ்ணன் நாயக்கர் ஆகியோர் பொம்மா நாயக்கர் தோட்டத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தனர். இதனை பார்த்த பொம்மா நாயக்கர் எதற்காக எனது தோட்டத்தில் ஆடுகளை மேய்க்கிறாய் என்று கிருஷ்ணா நாயக்கரிடம் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணன் நாயக்கர் தோகைமலை போலீசில் புகார் அளித்தார்.
படுகொலை
 இந்த புகார் காரணமாகவும், நிலம் தொடர்பாகவும் பொம்மா நாயக்கர் தரப்பினருக்கும், கிருஷ்ணன் நாயக்கர் தரப்பினருக்கும் இடையே நேற்று காலை தகராறு ஏற்பட்டது. அப்போது பொம்மா நாயக்கர் தரப்பினர் 7 பேர் சேர்ந்து கிருஷ்ணன் நாயக்கர் தரப்பினரை அரிவாளால் வெட்டினர். அப்போது சண்டையை விலக்கிய கிருஷ்ணன் நாயக்கரின் மாமனார் காமநாயக்கருக்கும்(70) சரமாரி வெட்டு விழுந்தது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கிருஷ்ணன் நாயக்கர் அவரது மகன் சின்னசாமி (27) ஆகிய 2 பேருக்கும் பலத்த வெட்டு விழுந்தது. அவர்களை உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை (பொறுப்பு) போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன, தோகைமலை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் கண்ணன், வருவாய் அதிகாரி ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காம நாயக்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சின்னயம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி மணி அளித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலை தொடர்பாக 7 பேரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்