பெண் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது

கண்ணமங்கலம் அருகே நடந்த பெண் கொலை வழக்கில் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கொன்றதாக அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

Update: 2021-08-06 19:08 GMT
கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே நடந்த பெண் கொலை வழக்கில் அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கொன்றதாக அவர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

பால் வியாபாரி சரண்

கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் அதே கிராமத்தை சேர்ந்த சாந்தி (வயது 45) என்ற பெண் கடந்த 3-ந் தேதி இரவு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

சாந்தியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவருடன் கடைசியாக அதே ஊரைச்சேர்ந்த பால்வியாபாரி வேல்முருகன் (47) பேசியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். இதை அறிந்த வேல்முருகன் நேற்று கீழ்நகர் கிராமநிர்வாக அலுவலர் கோபிநாத் முன்னிலையில் சரண்அடைந்தார். அவர் கண்ணமங்கலம் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பால்வியாபாரி வேல்முருகன் கூறியதாக போலீசார் கூறியதாவது:-

பணத்தை திருப்பி கேட்டார்

பால்வியாபாரி வேல்முருகன் சாந்தியுடன் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். சாந்தியிடம் அவர் ரூ.20ஆயிரம் பணமும் வாங்கியிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக சாந்தியை  தனது ஆசைக்கு இணங்க கேட்டும் மறுத்து வந்துள்ளார். மேலும் கொடுத்த பணத்தை தந்தால்தான் வருவேன் என கூறியிருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் கடந்த 3-ந் தேதி இரவு சாந்திக்கு போன் செய்து பணம் தருவதாக கூறி வரவழைத்து கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு, காதிலிருந்த கம்மலை கழட்டிக்கொண்டு, கத்தியை அருகே இருந்த முள்புதரில் வீசி விட்டு சென்றுள்ளார். 

கைது

அவர் கொடுத்த தகவலின் பேரில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், சரணடைந்த வேல்முருகன் முட்புதரில் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் ரத்தக் கறை படிந்த துணிகளுடன் ¾ பவுன்  கம்மலையும் மீட்டனர். 

தொடர்ந்து அவரை கைது செய்து ஆரணி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கைதான வேல்முருகனுக்கு கலா என்ற மனைவியும், காயத்ரி, பவித்ரா, ஆர்த்தி ஆகிய மூன்று மகள்களும் உள்ளனர். இதில் காயத்ரி சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் செய்திகள்