சூதாடியவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளை
புதுச்சேரியில் சூதாடியவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளையடித்த ரவுடி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
புதுச்சேரி, ஆக.7-
புதுச்சேரியில் சூதாடியவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம் கொள்ளையடித்த ரவுடி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கத்தியை காட்டி பணம் பறிப்பு
புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழே ஜான்பால் நகரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓய்வுபெற்ற அதிகாரிகள், தொழில்அதிபர்கள் உள்பட பலர் அனுமதியின்றி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு பலர் அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று 4 பேர் கொண்ட கும்பல் அங்கு புகுந்தது. அவர்கள் அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி, சூதாட்டத்துக்காக வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர். கொள்ளைபோன பணம் 4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
4 பேருக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் உள்பட 4 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுவையில் சூதாட்டம் நடத்த அனுமதி இல்லை. எனவே அங்கு சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ரவுடி கும்பல் ரூ.4 லட்சம் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.