சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி மட்டுமின்றி அதனை சுற்றி உள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் பாசிமணிகள், சிறிய, பெரிய மண்பானைகள், தங்க ஆபரணம், உறை கிணறுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அகரத்தில் நேற்று புதிதாக உறை கிணறு ஒன்று தென்பட்டது. தற்போது அதன் முதல் அடுக்கு மட்டுமே வெளிப்பட்டு உள்ளது. தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளும் போது மேலும் பல்வேறு அடுக்குகள் தெரிய வரும். சுடுமண்ணால் ஆன இந்த உறை கிணறு கீழடி பகுதியில் வசித்த அன்றைய தமிழர்கள் நீர்மேலாண்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. அகரத்தில் நடந்த அகழாய்வில் முதன்முறையாக உறை கிணறு வெளிப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.