சின்னணை பெரியணை கால்வாய்களை தூர்வாராததால் தடுப்பணைகள் நிரம்பியும் தண்ணீர் திறக்க முடியாத அவலம்

சின்னணை, பெரியணை கால்வாய்களை தூர்வாராததால் தடுப்பணை கள் நிரம்பியும் தண்ணீர் திறக்க முடியாத அவலம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த தண்ணீர் கோரையாற்றில் கலந்து வீணாக கேரளா செல்கிறது.

Update: 2021-08-06 17:36 GMT
பொள்ளாச்சி

சின்னணை, பெரியணை கால்வாய்களை தூர்வாராததால் தடுப்பணை கள் நிரம்பியும் தண்ணீர் திறக்க முடியாத அவலம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த தண்ணீர் கோரையாற்றில் கலந்து வீணாக கேரளா செல்கிறது.  

சின்னணை, பெரியணை 

பொள்ளாச்சி அருகே ஜமீன்ஊத்துக்குளியில் கிருஷ்ணா குளம் உள்ளது. இந்த குளத்து தண்ணீர் கோரையாற்றின் வழியாக வீணாக கடலில் கலப்பதை தடுக்க ராமபட்டிணம் பகுதியில் சின்னணை, பெரியணை கால்வாய்கள் கட்டப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில் சின்னணை, பெரியணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் புதர்மண்டி கிடக்கிறது. இதன் காரணமாக கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. 

நிரம்பி வழிகிறது 

தற்போது இந்த 2 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. ஆனால் கால்வாய்கள் புதர்மண்டி கிடப்பதால் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தடுப்பணைகள் நிரம்பி வழிந்து தண்ணீர் வீணாக சென்று வருகிறது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

சின்னணை, பெரியணை மூலம் ராமபட்டிணம், தாவளம், பட்டியகவுண்டனூர், பொன்மலையூர் உள்ளிட்ட பகுதிகளில் 260 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகின்றன. சின்னணை கால்வாய் 2 கிலோ மீட்டர் தூரமும், பெரியணை கால்வாய் 6½ கி.மீ. தூரமும் உள்ளது. 

வீணாக செல்கிறது 

இந்த நிலையில் பராமரிப்பு இல்லாததால் சில பகுதிகளில் கால்வாய் இருந்ததற்கு அடையாளமே இல்லாத நிலைக்கு மாறி விட்டது. இதன் காரணமாக பெரியணை, சின்னணைகள் நிரம்பியும் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. 

இதனால் ஆண்டுதோறும் இந்த 2 தடுப்பணைகளும் நிரம்பி கோரையாற்றின் வழியாக தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியதால் தண்ணீர் தேக்கி வைக்க முடிகிறது. 

தூர்வார வேண்டும் 

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் கால்வாய் தூர்வாரா ததால், வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் கோரையாற்றின் வழியாக கேரளாவுக்கு சென்று வீணாக கடலில் கலக்கிறது. 

சின்னணை, பெரியணை கால்வாயை தூர்வாரும் பட்சத்தில் மண்ணூர், தாவளம், பட்டியகவுண்டனூர் பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்