இளம்பெண் மீது தாக்குதல்; கணவர் உள்பட 3 பேர் கைது

பேராசிரியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்ணை தாக்கிய கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-06 17:35 GMT
விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகா மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் அஸ்லி (வயது 29). இவருக்கும், கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் சக்திவேல் (29) என்பவருக்கும் கடந்த 27.1.2021 அன்று திருமணம் நடைபெற்றது. அப்போது அஸ்லியிடம் சக்திவேல், தான் விழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருவதாக பொய் சொல்லி திருமணம் செய்துள்ளார். 
திருமணமான சில மாதங்கள் கழித்து இந்த விஷயம் அஸ்லிக்கு தெரியவரவே இதுபற்றி அவர் தனது கணவர் சக்திவேலுவிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. 
இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், தனது மனைவி அஸ்லியை தகாத வார்த்தையால் திட்டி செருப்பால் அடித்து கொடுமைப்படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
இதற்கு சக்திவேலின் தம்பி சண்முகவேல் (25), தாய் சாந்தி, தந்தை அமிர்தலிங்கம் ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது 

இதுகுறித்து அஸ்லி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சக்திவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், சண்முகவேல், அமிர்தலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். 
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேல்மாம்பட்டுக்கு விசாரணை நடத்த சென்ற பெண் போலீசாரை சக்திவேல் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்த சம்பவம் வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது. 

மேலும் செய்திகள்