ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-08-06 17:19 GMT
பொள்ளாச்சி

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

தமிழில் அர்ச்சனை

தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் பிரசித்தி பெற்ற கோவில்களில் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டது. 

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. 

விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) கண்ணன் தலைமை தாங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அர்ச்சகர்கள் சோமசுந்தரம், தில்லை மருதவாணன் ஆகியோர் தமிழில் அர்ச்சனை செய்தனர்.

 இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  இதில் இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

ஆய்வு

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழக அரசின் உத்தரவுப்படி பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. 

தமிழில் அர்ச்சனை செய்வது குறித்த விளம்பர பலகை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 அர்ச்சகர்கள் மற்றும் அவர்களது செல்போன் எண் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புவோர் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர். முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் மாசாணியம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது பக்தர்களுக்கு வழங்குவதற்கு தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த அன்னதானத்தை ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்