750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
வல்லநாட்டில் 750 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரில் 30 கிலோ எடை கொண்ட 25 பைகள் இருந்தன. அதில் சுமார் 750 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தியதாக மணக்கரை வேதகோவில் தெருவை சேர்ந்த சங்கர் (வயது 32), பலவேசன் (39) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.