திண்டுக்கல் மாநகராட்சி உரக்கிடங்கில் கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல் மாநகராட்சி உரக்கிடங்கில் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-08-06 16:33 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி முருகபவனத்தில் உள்ள உரக்கிடங்கை கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உரக்கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகள் மூலம் எவ்வாறு உரம் தயாரிக்கப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டார். 
மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு எவ்வாறு அகற்றப்படுகிறது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கலெக்டர், மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சுகாதாரத்துறை மற்றும் தாமரைப்பாடி புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் அருகே நடந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை கலெக்டர் பார்வையிட்டார். 
அப்போது தாரை, தப்பட்டை முழங்க கொரோனா பரவல் குறித்த பாடல்களை பாடி கல்லூரி மாணவ-மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்பகுதியில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு கலெக்டர் முக கவசம் வழங்கினார். மேலும் அவர்களிடம் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் செய்திகள்