திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வரை பணியாளர்கள் முற்றுகை
இணை இயக்குனர் அலுவலகத்தை ஆக்கிரமித்ததாக கூறி திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வரை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.;
முருகபவனம்:
இணை இயக்குனர் அலுவலகத்தை ஆக்கிரமித்ததாக கூறி அரசு மருத்துவ கல்லூரி முதல்வரை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனை
திண்டுக்கல் அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக புதிய மருத்துவ கல்லூரி திண்டுக்கல்லை அடுத்த ஒடுக்கத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரி முதல்வராக விஜயகுமார் உள்ளார். இதற்கிடையே அரசு மருத்துவமனையில் நலப்பணிகள் இணை இயக்குனராக இருந்த சிவகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார். அதையடுத்து இணை இயக்குனராக (பொறுப்பு) டாக்டர் பூங்கோதை நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவ குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்தினர். இதற்காக இணை இயக்குனர் அலுவலகம் கல்லூரி முதல்வர் அலுவலகமாக மாற்றப்பட்டு இருந்தது. ஆய்வு முடிந்து தேசிய மருத்துவ குழுவினர் திரும்பி சென்றதும் மீண்டும் அந்த அறை இணை இயக்குனர் அலுவலகமாக மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. ஆனால் தேசிய மருத்துவ குழுவினர் சென்ற பிறகும், கல்லூரி முதல்வர் அலுவலகம் இணை இயக்குனர் அலுவலகமாக மாற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முற்றுகை
இதுகுறித்து இணை இயக்குனர் அலுவலக பணியாளர்கள் கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் பலமுறை தெரிவித்தும் முதல்வர் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது, கல்லூரி முதல்வருக்கு என்று தனியாக நவீன வசதியுடன் மருத்துவக்கல்லூரியில் தனி அறை கட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் தற்போது பணியாற்றுவதற்காக தனி அறையும் உள்ளது. ஆனால் அவர் இணை இயக்குனர் அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது என்று கூறி கோஷமிட்டனர்.
இதற்கிடையே கல்லூரி முதல்வர் விஜயகுமார் தனது அறையைவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரை பணியாளர்கள் முற்றுகையிட்டு முதல்வர் அலுவலகத்தை பழையபடி இணை இயக்குனர் அலுவலகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த இணை இயக்குனர் (பொறுப்பு) பூங்கோதை, இந்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் முதல்வர் அலுவலகம் இணை இயக்குனர் அலுவலகமாக மாற்றப்படும் என்றார். இதையடுத்து பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
கல்லூரியின் கட்டுப்பாட்டில்...
இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் விஜயகுமாரிடம் கேட்ட போது, அரசு மருத்துவமனை கட்டிட வளாகம் முழுமையாக அரசு மருத்துவ கல்லூரி கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இது தொடர்பான அரசாணையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் அறையை இணை இயக்குனர் அலுவலகமாக மாற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிடும் பட்சத்தில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மருத்துவ கல்லூரி முதல்வரை இணை இயக்குனர் அலுவலக பணியாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.