விடுதியில் திடீர் தீ விபத்து; மூச்சுத்திணறி அரசு அதிகாரி பலி கைக்குழந்தை, பெண்கள் உள்பட 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத்திணறி அரசு அதிகாரி உயிரிழந்தார். கைக்குழந்தை, பெண்கள் உள்பட 6 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் தனியாருக்கு சொந்தமான விடுதி ஒன்று அமைந்துள்ளது. இதன் முதல் மாடியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையில் முதல் மாடியில் ஏற்பட்ட தீ விபத்தால் விடுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. தகவல் அறந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எழும்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், விடுதியில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.
விடுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் அங்குள்ள அறைகளில் தங்கி இருந்தவர்களுக்கு மூச்சத்திணறல் ஏற்பட்டது. புகை மூட்டத்தால் தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். எனினும் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் விடுதிக்குள் நுழைந்து, அங்கு புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்ட 4 ஆண்கள், 2 பெண்கள், ஒரு கைக்குழந்தை என 7 பேரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கனிம வளத்துறையில் துணை மேலாளராக பணியாற்றி வந்த அரவிந்தன் (வயது 50) என்பவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் புகைமூட்டத்தில் சிக்கிய கைக்குழந்தை, பெண்கள் உள்பட 6 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். திருவல்லிக்கேணியில் நள்ளிரவில் நடந்த தீ விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.