சென்னை விமான நிலையத்துக்கு துப்பாக்கி குண்டுடன் வந்த கொலம்பியா நாட்டு மாணவரால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்துக்கு துப்பாக்கி குண்டுடன் வந்த கொலம்பியா நாட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல விமானம் தயாராக இருந்தது. சென்னையை அடுத்த நாவலூர் பகுதியில் பிளஸ்-2 படித்து வரும் கொலம்பியா நாட்டைச்சேர்ந்த லூயீஸ் நெஸ்டர் (வயது 19) தனது தாய், தங்கையுடன் அந்த விமானத்தில் டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். இவர்களை பாதுகாப்பு அதிகாரிகள், ‘ஸ்கேனிங்’ முறையில் பரிசோதித்தனா். அப்போது லூயீஸ் நெஸ்டரை சோதனை செய்தபோது எச்சரிக்கை மணி ஒலித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் இருந்த மணிபா்சில் ஏதோ ஆட்சேபகரமான பொருள் இருப்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து மணிபா்ஸ்சை வாங்கி திறந்து பார்த்தபோது அதில் ‘0.25 எம்.எம்.’ ரக துப்பாக்கி குண்டு ஒன்று இருந்தது. அதனை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், மாணவரின் பயணத்தையும் ரத்து செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையில் தாய், தங்கையுடன் தங்கி பிளஸ்-2 படிப்பதால் இவா்களுடைய விசா நீடிப்பு சம்பந்தமாக டெல்லியில் உள்ள கொலம்பியா நாட்டு தூதரகத்தில் ஒரு சான்றிதழ் வாங்குவதற்காக 3 பேரும் டெல்லி செல்ல வந்து உள்ளனர்.
லூயீஸ் நெஸ்டரின் நண்பா் ஒருவரின் தாத்தா முறையான உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்தார். அவா் இறந்துவிட்டதால் அந்த துப்பாக்கியை அவரது குடும்பத்தினா் முறைப்படி அரசிடம் ஒப்படைத்தனா். அப்போது ஒரு குண்டை எடுத்து வைத்திருந்த அவரது நண்பர், அதை லூயீஸ் நெஸ்டர் கேட்டதால் அவரிடம் கொடுத்துள்ளார். அந்த துப்பாக்கி குண்டை இவர் தனது மணிபர்சில் வைத்து இருந்ததாக தெரிவித்தார்.
லூயீஸ் நெஸ்டர் அறியாமல் செய்த தவறு என்பதாலும், பள்ளி மாணவராக இருப்பதாலும், அவருடைய எதிர்கால நலன் கருதி அவரை மன்னித்து விடுவிக்க முடிவு செய்தனா். அதோடு இந்த துப்பாக்கி குண்டு தவறுதலாக வெடித்து இருந்தால் அதனால் என்ன ஆபத்துகள் எற்படும்? என்பதையும் அவருக்கு தெளிவாக எடுத்து கூறினா். பின்னர் லூயீஸ் நெஸ்டரிடம் எழுதி வாங்கிய போலீசார், அவரை எச்சரித்து தாய், தங்கையுடன் அனுப்பி வைத்தனர்.