நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது
நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் கரையிருப்பு சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக நேதாஜி நகர் முனியாண்டி மகன் வினோத் (வயது 28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிவன் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தல் ரேஷன் அரிசி மற்றும் வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.
இதேபோன்று நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டில் 1½ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த கண்ணாடி பாதுஷா, அசன் பாதுஷா, அன்சாரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.