குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது
கலபுரகியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய என்ஜினீயரை, ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பெங்களூரு: கலபுரகியில் குடிநீர் இணைப்பு வழங்க ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய குடிநீர் வாரிய என்ஜினீயரை, ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் இணைப்புக்கு லஞ்சம்
கலபுரகி டவுனில் குடிநீர் வாாியத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருபவர் நாகராஜ். இதற்கிடையில், கலபுரகியில் டவுனில் புதிதாக அடுக்குமாடி வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்கவும், கழிவுநீரை வெளியேற்றுவதற்கான அனுமதி வழங்கும்படி கோரியும் குடிநீர் வடிகால் வாரியத்தில் அண்ணாசாகேப் பட்டீல் என்பவர் மனு கொடுத்திருந்தார்.
அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து, என்ஜினீயர் நாகராஜை சந்தித்து, அண்ணாசாகேப் பட்டீல் குடிநீர் இணைப்பு வழங்கும்படி கேட்டுள்ளார். இதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி என்ஜினீயர் நாகராஜ் கேட்டதாக தெரிகிறது. ஆனால் ரூ.2 லட்சம் கொடுக்க அவர் மறுத்து விட்டார்.
என்ஜினீயர் கைது
பின்னர் ரூ.1½ லட்சம் கொடுக்க அண்ணாசாகேப் பட்டீல் சம்மதித்ததாக தெரிகிறது. இதனை என்ஜினீயர் நாகராஜும் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், ஊழல் தடுப்பு படை போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். போலீசார் கூறிய அறிவுரையின்படி என்ஜனீயர் நாகராஜை சந்தித்து ரூ.1½ லட்சத்தை அண்ணாசாகேப் பட்டீல் கொடுத்திருநதார்.
பின்னர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். அப்போது அவரிடம் ரூ.1½ லட்சம் லஞ்சம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, என்ஜினீயர் நாகராஜை ஊழல் தடுப்பு படை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான நாகராஜ் மீது கலபுரகி ஊழல் தடுப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.