காபி தோட்டத்தில் காட்டு யானைகள் தஞ்சம்
மூடிகெரே அருகே, காபி தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு: மூடிகெரே அருகே, காபி தோட்டத்திற்குள் தஞ்சம் புகுந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
தஞ்சம் புகுந்த யானைகள்
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் உள்ளது சந்திராபுரா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதன்காரணமாக கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. பின்னர் கிராமத்தை சேர்ந்த சித்தார்த் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் 5 காட்டு யானைகளும் தஞ்சம் புகுந்தன.
கிராம மக்கள் கோரிக்கை
காபி செடிகளை தின்றும், தும்பிக்கையால் பிடுங்கி எறிந்தும் காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்தார்த், கிராம மக்கள் உதவியுடன் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தார். ஆனால் முடியவில்லை.
காட்டு யானைகள் காபி தோட்டத்திற்குள் புகுந்தது பற்றி சித்தார்த், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்ட முயற்சி செய்தனர். ஆனாலும் வனத்துறையினர் முயற்சி தோல்வி அடைந்தது. ஆனாலும் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே வனவிலங்குகள் கிராமத்திற்குள் புகுந்து விடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.