கேரளாவில் இருந்து குமரிக்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்
கேரளாவில் ெகாரோனா பரவல் அதிகரித்து வருவதால் குமரி எல்லையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொல்லங்கோடு:
கேரளாவில்கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குமரி எல்லையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து தமிழகத்திற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால், தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை எல்லை பகுதிகளில் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குமரி மாவட்ட கேரள எல்லையில் நேற்று கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொல்லங்கோடு அருகே காக்கவிளை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தடுப்பூசி சான்றிதழ்
கேரளாவில் இருந்து குமரிக்கு வாகனங்களில் வருகிறவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் உள்ளனவா? என்று சரிபார்த்த பின்புதான் அனுமதிக்கிறார்கள். இந்த சான்றிதழ்கள் இல்லாமல் வருகிறவர்களை திருப்பி அனுப்புகிறார்கள். குமரியில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்களையும் தீவிர விசாரணைக்கு பின்புதான் அனுப்புகிறார்கள்.
மேலும் களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்றுவிட்டு திரும்பி வருகிறவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்புதான் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதேபோல் மாவட்டத்தின் எல்லையில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.