சேலத்தில் பாறை உருண்டு விழுந்து சிறுவன் பலி சக குழந்தைகளுடன் விளையாடிய போது பரிதாபம்
சேலத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிய போது பாறை உருண்டு விழுந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
சேலம்
8 வயது சிறுவன்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், வெள்ளிப்பட்டறை தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இதில் இளைய மகன் விக்னேஷ் (வயது 8). இவன் பெரிய புத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
பிரகாசின் அக்காள் ஈஸ்வரி வீடு சின்ன கஞ்சமலை அடிவாரத்தில் உள்ளது. அவருடைய வீட்டுக்கு பிரகாசின் குழந்தைகள் வந்து விளையாடுவது வழக்கம்.
பாறை விழுந்து சாவு
அதன்படி நேற்று ஈஸ்வரின் வீட்டின் பின்புற பகுதியில் விக்னேஷ் மற்றும் சில குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தனர். மதியம் 12.30 மணி அளவில் திடீரென அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது. அந்த பாறை அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்தது. இதில் சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானான்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தினர். தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
போலீஸ் விசாரணை
பாறைக்குள் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.