பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசாருடன் உணவு சாப்பிட்ட டி.ஜி.பி. சைலேந்திர பாபு
ஊட்டிக்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உணவு சாப்பிட்டார்.;
ஊட்டி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 3-ந் தேதி ஊட்டிக்கு வந்தார். அவர், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டியில் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தங்கி உள்ளனர்.
இதையொட்டி பிற மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு 1,240 பேர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் ஊட்டியில் உள்ள திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஊட்டி தனியார் கல்லூரியில் பாதுகாப்பு பணிக்காக வந்து தங்கி உள்ள போலீசாருக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குளிர்பிரதேசமான ஊட்டியில் போலீசார் தங்குவதற்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதா, உணவு, குடிநீர் தரமாக வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். மேலும் போலீசாருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.
ஆய்வின்போது மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உடனிருந்தனர்.