உயர்த்தப்பட்ட உதவித்தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் ரங்கசாமி அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என்று ரங்கசாமி கூறினார்.

Update: 2021-08-05 19:31 GMT
புதுச்சேரி, ஆக.6-
மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்படும் என்று ரங்கசாமி கூறினார்.
உபகரணங்கள்
புதுவை அரசின் சமூக நலத்துறை, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் இணைந்து மத்திய அரசு நிறுவனம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வழுதாவூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.    இதில்   அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.    எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு முடநீக்கு கருவிகளை வழங்கினார். 
அப்போது 500 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.37 லட்சம் மதிப்புள்ள சக்கர நாற்காலி, 3 சக்கர வாகனம், செல்போன், காதுகேட்கும் கருவிகள் உள்ளிட்ட முடநீக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
அடுத்த மாதம் முதல்...
மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது. சமீபத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் ரூ.500 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த தொகை அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் பயனாளிகளுக்கு வழங்கப்படும். அரிசியையும் உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும். 
கடந்த கால ஆட்சியில் உதவித்தொகை ரூ.10 கூட உயர்த்தப்படவில்லை. வேலைவாய்ப்பிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய விகிதாசாரம் வழங்கப்படும். மத்திய அரசும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு ரங்கசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் நலத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர் கலாவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்