ரேசன் கடைகளில் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

ரேசன் கடைகளில் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

Update: 2021-08-05 18:39 GMT
வேலூர்

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடக்கவிழாவும், உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை பணிகள் குறித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் நஜிமுதீன் தலைமை தாங்கினார்.

 நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பேசினார். மேலும் எவ்வாறு பணி மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

மாற்றிக் கொள்ள வேண்டும்

பின்னர் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

ஆட்சிக்கு வந்த 90 நாட்களில் எல்லாவற்றையும் செய்து விட வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். தற்போது எங்களால் நிர்வாகத்தில் முழுமையாக செயல்பட முடியவில்லை. கொரோனா என்ற கொடிய நோயின் தொப்புள் கொடியை அறுக்கும் செயலில் முதல்- அமைச்சர் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். 6 அல்லது 9 மாதங்களில் கொரோனாவின் ஆதிக்கம் அடங்கி விடும். அதற்குப் பிறகு எங்களால் முழுமையாக ஒத்துழைக்க முடியும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தில் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் விரைவாக செயல்பட வேண்டும். கடந்த ஆட்சியில் உங்களுடன் பழகி இருக்கிறேன். இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறேன். உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள்.

 இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரேஷன் கார்டுகள்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் அரசு சார்பில் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவித் தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான பொருட்கள் 99 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 15 நாட்களுக்குள்  கார்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் இதுவரை 7 லட்சம் பேர் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கார்டு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த மாதம் முதல் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

தமிழகத்தில் 2,600 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு 44 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரிசி கடத்தலை தடுக்க ஒரு ஏ.டி.ஜி.பி, 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 1,851 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்

தமிழகத்திற்கு 28 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு 7 ஆயிரத்து 500 கிலோலிட்டர் மட்டுமே வழங்கி வருகிறது. தொடர்ந்து மண்எண்ணெய் அளவை குறைத்து வருகின்றனர். தமிழகத்திற்கு கூடுதலாக மண் எண்ணெய் வழங்க வேண்டும் என முதல்-அமைச்சர் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு சொந்தமாக கட்டிடம் கட்டப்படும். மேலும் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். போலி குளிர்பான ஆலைகள் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புதுறை ஆணையர் ஆனந்தகுமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் ராஜாராமன், கலெக்டர்கள் குமாரவேல்பாண்டியன் (வேலூர்), கிளாட்ஸ்டன்புஷ்பராஜ் (ராணிப்பேட்டை), எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமலுவிஜயன், ஈஸ்வரப்பன், வில்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்