கட்டிடம் இடிந்து விழுந்து தச்சு தொழிலாளி பலி
தேவகோட்டையில் பழைய வீட்டில் மர சாமான்களை பிரித்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து தச்சு தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
தேவகோட்டை,ஆக
தேவகோட்டையில் பழைய வீட்டில் மர சாமான்களை பிரித்தபோது கட்டிடம் இடிந்து விழுந்து தச்சு தொழிலாளி பரிதாபமாக பலியானார்.
தச்சுத் தொழிலாளி
தேவகோட்டை எஸ்.எம்.எல். வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). தச்சு தொழிலாளி. இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். ராஜேந்திரன் தேவகோட்டை செப்பவயலார் வீதியில் உள்ள ஒரு பழைய வீட்டை குத்தகைக்கு எடுத்து அதில் இருந்த மர சாமான்களை பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை செப்பவயலார் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
இறந்து கிடந்தார்
இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜேந்திரன் ஓட்டி வந்த சைக்கிள் அங்கு நிற்பதை அவரது மகன் கண்டுபிடித்தார். மேலும் ராஜேந்திரன் வேலை செய்வதற்காக கழற்றி வைத்திருந்த ஆடைகளும் அப்படியே கிடந்தன. மேலும் அங்கு பழைய வீட்டின் கட்டிட இடிபாடுகளுக்குள் ராஜேந்திரன் புதைந்து பிணமாக கிடந்தார்.
உடனடியாக இது குறித்து தேவகோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் அங்கு வந்து அழுகிய நிலையில் கிடந்த ராஜேந்திரனின் உடலை நகராட்சி ஊழியர்களை கொண்டு மீட்டனர். பின்னர் அங்கேயே அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
விசாரணை
பழைய வீட்டின் மர சாமான்களை பிரித்து எடுக்கும் பணியின்போது கட்டிடம் இடிந்து விழுந்து ராஜேந்திரன் பலியானது தெரிய வந்தது.
இது குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.