மக்களை தேடி மருத்துவம் திட்டம்
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள தினைக்குளம் ஊராட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் தங்கவேலு தலைமை தாங்கினார். போகலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சத்யா குணசேகரன், தாசில்தார் தமிம்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தவமுருகன் வரவேற்றார். பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் திட்டத்தை தொடங்கி வைத்து தடுப்பூசி முகாமை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் வாகனத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முருகேசன் எம்.எல்.ஏ.பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள், வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதை மக்கள் நன்கு உணர்ந்து மீண்டும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசு அறிவுரைகளை ஏற்று நடந்துக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசியை அனைவரும் தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும். மருத்துவ துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார். இதில் ஒன்றிய துணைச்செயலாளர் சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் உதயகுமார், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் ராஜகோபால், சண்முகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலர் பிரதிபா நன்றி கூறினார்.