பெண்களிடம் நகை வழிப்பறி
பெண்களிடம் நகை பறிக்கும் வழிப்பறி திருடர்கள் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமக்குடி,
பரமக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடமும், குழந்தைகளுடன் நடந்துசெல்லும் பெண்களிடமும் மோட்டார் சைக்கிளில் வலம்வரும் வழிப்பறி திருடர்கள் தங்க நகையை பறித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி காளிதாஸ் தெருவில் தனியாக சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நகையை பறித்துள்ளனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் திருடர்களை போலீசார் கைது செய்தனர். தொடர்கதையாக நடந்து வரும் இந்த வழிப்பறியால் பெண்கள் தனியாக சாலைகளில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இந்த சம்பவங்களில் ஈடுபடும் திருடர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்து அசுர வேகத்தில் சென்று விடுகின்றனர். குற்றச்செயல்களை கண்காணிக்கவும், அதில் ஈடு பவர்களை கண்டறியவும் பரமக்குடி நகரில் பல்வேறு இடங்களில் காவல் துறையின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் கண்காணிப்பு கேமரா பல இடங்களில் செயல் படாமல் இருப்பதால் சிரமம் ஏற்படுகிறது என போலீசார் கூறுகின்றனர். இது வழிப்பறி திருடர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. இதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.