சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை
தேனி மாவட்டத்தில் வனப்பகுதி வழியாக ஆடி அமாவாசையை முன்னிட்டு, சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தேனி :
தேனி மாவட்ட வருசநாடு அருகே உப்புத்துறை கிராமம் வழியாக விருதுநகர் மாவட்டம் வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பாதை உள்ளது. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் இந்த கோவிலில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் அவர்களின் வசதிக்காக தேனியில் இருந்து உப்புத்துறை வரை 50-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
உப்புத்துறையில் இருந்து வனப்பகுதி வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோவிலில் நடைபெற்ற திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இந்த ஆண்டும் சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கண்டமனூர் வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் யானைகஜம் அருகே மலைப்பாதையில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்துள்ளனர். இந்த சோதனை சாவடியில் கண்டமனூர் வனச்சரகர் ஆறுமுகம் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது யானைகஜம் அருவியில் குளிப்பதற்காக வந்திருந்த இளைஞர்களை அவர் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினார். இந்த ஆய்வின்போது வனவர் பிரதீப், செந்தில் மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.