கடலூரில் திருநங்கைகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாம்

கடலூரில் திருநங்கைகளுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

Update: 2021-08-05 16:45 GMT
கடலூர், 

தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி கடலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்ட மான மூன்றாம் பாலினர் நலன் திட்டத்தில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள குடும்ப அட்டை பெறாத, வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மற்றும் அடையாள அட்டை பெறாத திருநங்கைகளுக்கு முதற்கட்டமாக கொரோனா நிதி உதவி வழங்கப்பட்டது. அதாவது, 353 திருநங்கைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.7, லட்சத்து 6 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 238 பேர் நிதி உதவி பெற்றுள்ளனர். 

2-ம் கட்டமாக கொரோனா நிவாரண நிதி உதவி 347 திருநங்கைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்து 94 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 190 திருநங்கைகள் வாங்கி பயன் அடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசி

கடலூர் மாவட்டத்தில் திருநங்கைகளில் 48 பேர் குடும்ப அட்டை வைத்துள்ளனர். மூன்றாம் பாலினர் நலவாரியம் மூலம் 280 பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். அடையாள அட்டை பெறாத திருநங்கைகள் 121 பேர் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்ற திருநங்கை களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. 
முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 100 திருநங்கைகள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முகாமில் நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் திட்ட மேலாளர் செல்வம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் (பொறுப்பு) பாஸ்கரன், மற்றும் டாக்டர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்