பள்ளி காவலாளியை கட்டிப்போட்டு தலைமை ஆசிரியர் அறை சூறை
திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி காவலாளியை கட்டிப்போட்டு தலைமை ஆசிரியர் அறையை சூறையாடிய 2 மேளக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் இரவு காவலாளியாக வேலியாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் முத்துக்குமரன் (வயது 38) என்பவர் உள்ளார். இவருடைய தந்தை மண்ணாங்கட்டி மேளக்காரர் ஆவார்.
மேள கச்சேரி தொழில் சம்மந்தமாக மண்ணாங்கட்டிக்கும், பிடாகம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ராமர்(40), வேலியம்பாக்கத்தை சேர்ந்த குருநாதன் மகன் அன்பரசு (30) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
காவலாளியை கட்டிப்போட்டு...
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் முத்துக்குமரன் பள்ளிக்கூடத்தில் பணியில் இருந்தார். அப்போது இரவு 11 மணி அளவில் ராமர், அன்பரசு ஆகியோர் பள்ளிக்குள் புகுந்து காவலாளி முத்துக்குமரனை தாக்கினர். மேலும் ஒயரால் முத்துக்குமரனின் கை, கால்களை கட்டிப்போட்டு ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவரது முதுகில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2 பேரும் தலைமை ஆசிரியர் அறை கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் உள்ளே நுழைந்து அங்கிருந்த கணினி, பிரிண்டர், மேஜை, நாற்காலி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி, சூறையாடினர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் சென்று விட்டனர். ஒயரால் கட்டப்பட்ட முத்துக்குமரன், அதனை அவிழ்க்க முடியாமல் இரவு முழுவதும் தவித்தார்.
மனைவி அதிர்ச்சி
இதற்கிடையில் நேற்று காலை வெகுநேரமாகியும் முத்துக்குமரன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது மனைவி புவனா, தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த புவனா, பள்ளிக்கூடத்திற்கு வந்து பார்த்தார். அங்கு தனது கணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கட்டுகளை அவிழ்த்துவிட்ட அவர், தலைமை ஆசிரியர் உதயசூரியனுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
2 மேளக்காரர்கள் கைது
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமர், அன்பரசு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
முன்விரோதத்தில் பள்ளி காவலாளியை கட்டிப்போட்டு தலைமை ஆசிரியரின் அறை சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.