உடுமலை பகுதியில் முருங்கையில் ஊடுபயிராக காய்கறிகள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

உடுமலை பகுதியில் முருங்கையில் ஊடுபயிராக காய்கறிகள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

Update: 2021-08-05 16:25 GMT
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் முருங்கையில் ஊடுபயிராக காய்கறிகள் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ஊடுபயிர் சாகுபடி
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.காய்கறிகளை தனிப்பயிராக மட்டுமல்லாமல் தென்னை போன்ற நீண்ட காலப் பயிர்களில் ஊடுபயிராகவும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தநிலையில் முருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் தக்காளி, வெண்டை போன்ற காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எல்லா வகை மண்ணிலும் வளர்ந்து எல்லா பருவத்திலும் பலன் தரக்கூடிய பயிராக முருங்கை உள்ளது.இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது என்பது கூடுதல் சிறப்பாகும். முருங்கையில் மர முருங்கை (நாட்டு முருங்கை), செடி முருங்கை என்று 2 வகைகள் உள்ளது.இதில் மர முருங்கை சுமார் 50 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது.மேலும் இதன் காய், இலை, பட்டை உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது மட்டுமல்லாமல் காய்கள் சுவையாகவும் இருக்கும்.
சீரான வருமானம்
செடி முருங்கையைப் பொறுத்தவரை குறுகிய காலப்பயிர் என்பதுடன் அதிக மகசூலும் கொடுக்கக் கூடிய ரகங்கள் இதில் உள்ளது.இவை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையே பலன் தரக்கூடியதாக உள்ளது.ஆனாலும் பெரும்பாலும் வணிக ரீதியாக செடி முருங்கைகளையே விவசாயிகள் வளர்த்து வருகின்றனர்.இவை விதைகள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது.விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் முளைத்து விடும்.விதைகளை நேரடியாக நிலத்தில் விதைப்பதற்குப் பதிலாக பாலிதீன் பைகளில் விதைத்து 30 நாட்கள் வளர்ந்ததும் கன்றை எடுத்து நடவு செய்யலாம்.தேவையான அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை உரிய பருவத்தில் கொடுப்பதன் மூலம் கூடுதல் மகசூல் ஈட்ட முடியும்.அதேநேரத்தில் பழ ஈக்கள், பூ மொட்டு துளைப்பான் கம்பளிப் பூச்சிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும், தூர் அழுகல் நோய் போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு அவசியமாகும்.விதைத்த 6 ம் மாதம் முதல் அறுவடை செய்யத் தொடங்கலாம்.ஒரு ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் 20 முதல் 22 டன் வரை காய்கள் கிடைக்கும்.இதனால் சீரான வருமானம் கிடைக்கிறது.இதுதவிர தற்போது முருங்கையில் ஊடுபயிர் சாகுபடி செய்து கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறோம்.தக்காளி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது பெருமளவில் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.இது முருங்கைக்கும் சாதகமான அம்சமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முருங்கை பவுடர் தொழிற்சாலை
ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவத்தில் முருங்கை வரத்து அதிகரித்து விலை உயர்கிறது.அதுபோன்ற சூழ்நிலையில் முருங்கை காய்களை மதிப்புக்கூட்டும் விதமாக முருங்கை பவுடர் தயாரித்து ஏற்றுமதி செய்யலாம். 
எனவே திருப்பூர் மாவட்டத்தில் அரசு முருங்கை பவுடர் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்