புதிய ரேஷன் கார்டு பெற மக்கள் அலைக்கழிப்பு

தேனியில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது.;

Update: 2021-08-05 15:50 GMT
தேனி: 

தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு தமிழக அரசு கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணி நடந்ததால் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. 

பின்னர் மீண்டும் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதன்படி ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் முடிந்து, கார்டுகள் அச்சடித்து வந்தவுடன் அவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


ஆனால், தேனி தாலுகா அலுவலகத்துக்கு தினமும் புதிய ரேஷன் கார்டு பெற்றுக் கொள்வதாக மக்கள் பலர் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அவ்வாறு வரும் மக்கள் தங்களின் செல்போன் எண்ணுக்கு கார்டு அச்சடித்து வந்துவிட்டதாக வந்துள்ள குறுஞ்செய்தியுடன் வந்த போதிலும், பல்வேறு காரணங்களை கூறி மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். 


நூற்றுக்கணக்கான புதிய ரேஷன் கார்டுகள் அச்சடித்து மக்களுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் கிடப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழங்கல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "புதிய கார்டுகள் அச்சடித்து வந்தபின்னர் உடனுக்குடன் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தாமதத்துக்கான காரணம் குறித்து அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்