ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

Update: 2021-08-05 14:57 GMT
துடியலூர்

குப்பைக்கு தீ வைப்பதால் பாதிப்பு ஏற்படுவதால் அசோகபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புகை மண்டலம்

கோவையை அடுத்த அசோகபுரம் ஊராட்சியில் 12 ஆயிரத்திற்கு மேற் பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த ஊராட்சியில் சேகர மாகும் குப்பைகள் லட்சுமி நகர் மற்றும் வாரி கார்டன் அருகே உள்ள பொதுஇடத்தில் கொட்டப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குப்பைமேட்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தீ வைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

முற்றுகை 

இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் தொடர்ந்து புகை வந்ததால் பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. 

இதையடுத்து ஒன்றிய கவுன்சிலர் கலாமணி சாந்தாராம் மற்றும் சங்க நிர்வாகி அசோக்குமார், செந்தில் ஆகியோர் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம், ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர்.

கோரிக்கை மனு

இதை அறிந்த துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், கொரோ னா ஊரடங்கு அமலில் உள்ளதால் கூட்டம் கூட கூடாது.  

கோரிக் கைகளை மனுவாக கொடுத்து விட்டு செல்லும்படி கூறினர். அதை ஏற்று பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 

குப்பையில் தீ வைக்கப்பட்டதை போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். 

அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

இது குறித்து ஊராட்சி தலைவர் ரமேஷ் கூறும் போது, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அசோகபுரம் ஊராட்சி குப்பைகளை எடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. 

எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்