கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய டாஸ்மாக் ஊழியர்கள்
கோரிக்கை அட்டையை அணிந்தபடி டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றினர்.
திண்டுக்கல்:
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும். சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, மேற்கண்ட கோரிக்கைகள் அச்சிடப்பட்ட கோரிக்கை அட்டைகளை அணிந்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று பணியாற்றினர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ. திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை அட்டைகள் அணிந்து பணியாற்றினர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினோம் என்றனர்.